ஆரியத்துக்கு முன் இந்தியாவின் நிலை என்ன?
அறிஞர் அண்ணா அவர்களது ஆரியமாயை என்ற தலைப்பில், (முந்தைய காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்ட நூல் இது) வெளிவந்த அறிவுக் கட்டுரைகள் ஆராய்ச்சிப் பொழிவாக மலர்ந்துள்ளது.அதில் உள்ள முக்கியப் பகுதிகள் நம் இன இளைஞர்களுக்கும், பண்பாட்டுப் படையெடுப்பை உணர்த்த வேண்டியவர்களுக்குப் பாடமாகவும் கற்றுத் தரவேண்டிய பகுதிகளை அப்படியே கீழே தருகிறோம்:
கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும் ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களுமாவது இந்தத் துறையிலே சற்று உழைப்பார்களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல் உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு மறைந்து போனது போல, ஓர் காலத்திலே உலகப் புகழ் வாய்ந்த திராவிட இனமும் அழிந்தேதான் போகும்! எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறதோ, அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்.
எமைநத்துவாய் என எதிரிகள் கோடி
இட்டழைத்தாலும் தொடேன்
- என்று இன எழுச்சியே உருவானது போன்ற நம் கவிஞர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) பாடுகிறார்!
தொடேன் என்று, உறுதியும் ஆவேசமும் மிளிர, அந்தப்பதம் உயிர்க்கவியின் உள்ளத்திலிருந்து பீறிட்டுக்கொண்டு வெளிக்கிளம்புகிறது! எதிரிக்கு அடிமையாகமாட்டேன். கோடி தரினும்! என்று கூறுகின்றார். கோடி ரூபாய் - பவுன்- வைரக்-கற்கள் - நவரத்தினக் குவியல், எதை நீ கோடியாகக் குவித்து என் எதிரே வைத்தாலும் சரியே, உன்னிடம் நான் அடிவருடியாக மாட்டேன் என்று கவி கூறுகிறார். கோடி என்ற பதத்துடன், வேறு பொருளைக் குறிக்கும் எப்பதத்தையும் அவர் இணைத்தாரில்லை! ஏன்? இன்ன பொருள் என்று குறித்துவிட்டால் சரி, வேறு பொருள் கோடி தருகிறேன் என்று எதிரிகேட்க இடமுண்டல்லவா? கோடி ரூபாய் தருகிறேன் என்று எதிரி கூறுகிறான்; தமிழன் வேண்டேன் என்று மறுக்கிறான்; உடனே தந்திரமுள்ள எதிரி கோடி வராகன் தருகிறேன் என்று கூறலாமல்லவா? அந்தப் பேரப் பேச்சுக்கே கவி இடங்கொடுக்கவில்லை. எதுவாகவேணும் இருக்கட்டுமய்யா, கோடி குவித்தாலும் வேண்டாம் என்று முடிவாகக் கூறுகிறார். `தொடேன் என்று கவி கூறியதிலே, கையினால் தொடேன் என்ற பொருள் மட்டுமல்ல; கருத்தினாலும் தொடேன் என்ற பொருளும் தொக்கியிருக்கிறது. இப்போது மறுமுறை கூறிப்பாருங்கள் அந்தக் கவிதையை,
எமை நத்துவாய் என எதிரிகள் கோடி
இட்டழைத்தாலும் தொடேன்
இந்த உணர்ச்சியும், உறுதியும், சுயநலத்தைப் பற்றித் துளி நினைப்பும் இல்லாத மனப்பான்மையும், சபலத்திற்கு இடங்கொடுக்காத தன்மையும், வீரமும் இருப்பின், கோடி ஈட்டிகள் தமிழரின் மார்புக்கு நேரே நீட்டப்பட்டாலும், எதிரி வெல்ல முடியாதே! எங்கே காண்கிறோம் அந்த உறுதியை? எவரிடம் கேட்கிறோம் இத்தகைய வீரப்-பேச்சினை?
`நமக்கென்ன என்று கூறும் சுயநலமிகளும்
`நம்மால் ஆகுமா! என்று பேசும் தொடை நடுங்கிகளும்,
`ஏன் வீண் வம்பு என்று சொல்லும் கோழைகளும்,
``எனக்கு இது பிடித்தமில்லை என்று மிடுக்காகக் கூறும் கோடரிகளும் தமிழகத்திலே உலவக் காண்-கிறோம்!
``மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த என் மறவேந்தர்
பூனைகள் அல்லர், அவர் வழிவந்தோர்
புலிநிகர் தமிழ்மாந்தர்!
- என்ற வீர முழக்கம், எப்போது தமிழர் மனைதோறும் கேட்கிறதோ, என்றைய தினம் தமிழர் உள்ளம் இந்த நிலை பெறுகிறதோ, அன்றே ஆரியர், `கனகவிசயனைக் கல்லெடுக்க வைத்த சேரன் மரபினர் மீண்டும் தமிழரா-யினர்; இனி நமது கடை நடவாது என்பது தெரிந்து பல்லெல்லாம் தெரியக்காட்டி நிற்பர்! பணிவர்!
பகைவரை அடுத்துக் கெடுத்தன்றிப் போரிட்டு அடக்கிய வரலாறே ஆரியருக்குக் கிடையாது, பெரிய போர்களிலே, அவர்களுடைய பெயர் சம்பந்தப்பட்டதே கிடையாது. புராண இதிகாசங்களிலே நடைபெற்றதாகக் கூறப்படும் போர்கள் வெறும் புளுகு என்றபோதிலும், அதிலும் வீரத்தால் வெற்றி கிடைத்ததாகக் கதை கிடையாது. வேள்வியால் வெற்றி, பரமன் அருளால் பலம், மாய அஸ்திரங்களால் எதிரி தோற்றான் என்றுதான் இருக்கும். திராவிட வரலாறுகளிலோ, வீரமே முதலிடம் பெற்றிருக்கும்!
ஆரிய இனம் போரிட்டுப் புகழ் ஈட்டியதில்லை; பிறரின் புத்திகெட்ட போதுதான் ஆரியரின் கொட்டம் வளரும்!
போதை ஏறியவன், கல்தடுக்கியோ, காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான். ஆரியரும் திராவிட இனத்திடையே கருத்திலே போதை மூண்டிடச் செய்துவிட்டுப் பிறகு கீழே உருட்டிவிட்டனர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமைதாங்கியானான். சோர்ந்தான், சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே.
`அய்யன்மீர்! இப்போது நீவிர் வணங்கும் உருவாரங்கள், `ஆரியக் கற்பனை என்று கூறுவோரை, மேதாவிகளென்று தம்மை எண்ணிக் கொண்டுள்ள தமிழர்கள், நம்புவதில்லை. நையாண்டி செய்கின்றனர்! எதற்கெடுத்தாலும் ஆரியச்சூது, ஆரியச்சதி, புரட்டு என்று கசடர்கள் கூறுகிறார்கள் என்று இந்த மேதாவிகள் கூறுகின்றனர்.
`மழையாம் மழை மழை நம்மை என்ன செய்யும்? என்று எருமை கூறுவதில்லை, அதன் நடவடிக்கை, அதனுடைய நினைப்பை நமக்குக் காட்டுகிறது. தமிழரிலே தடித்த தோலர் உளர், நாற்காற் பிராணிகளிலே எருமை இருத்தலைப்போல! வீணான மனப்பிராந்தியால் சிலர், இதுபோல ஆரியர்-திராவிடர் எனப் பிதற்றுகின்றனர் என்று கூறும் ஏமாளிகளுக்கு, எத்தனை ஏடுகளைக் காட்டினாலும் கருத்துத் துலங்குவதில்லை. சுயமரியாதைக்காரர்களுக்குத்தான், ஆரியரிடம் வீணான துவேஷமிருக்கிறது என்று எளிதில் கூறிவிடுகிறார்கள். சுயமரியாதை இயக்க சம்பந்தமே இல்லாத, அறிவுத்துறையிலே ஈடுபட்டுள்ள பேராசிரியர்களின் கருத்துரைக்கு என்ன குற்றங் கூறமுடியும்?
ஆரியர், தங்களுடைய கருத்துக்களையும் கடவுள் கதையும் கூறிவரும்போது, அறிவுக்கு இவை பொருந்துமா? ஆராய்ச்சிக்கு ஈடுகொடுக்குமா? என்பனபற்றி கவலையே கொள்ளவில்லை. ஆண்டை, அடிமைக்குக் காரணம் கூறிக்கொண்டிருப்பானா? குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப்பற்றியும் கதை கூறும்போது, குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய்ப்பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, `தாத்தா இதை நான் நம்பமுடியாது என்று கூறுவதுண்டா? குழந்தைப்பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்தபோதுதான், இடிதேவன், மின்னல்மாதா, மழைமாகாளி, தீக்கடவுள் எனக் கடவுள் கதைகள் கட்டி விடப்பட்டன. உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால் இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்றும் விடாப்பிடியாக வைத்துக்கொண்டிருப்பதுடன், அதே கருத்துக்களை மக்களிடைப் பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக்கொண்டுள்ளனர். அதனாலேயே, அறிவு சூன்யமே ஞானமென்றும், இருப்பதை இல்லையென்று கூறுவதே வேதாந்தமென்றும், இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கமென்றும், போதிக்கப்பட்டுவிட்டது. அபின் விற்று வாழுபவன், போதை கூடாது என்ற பிரசங்கம் புரிவானா?
மற்ற மக்களுக்குத் தெரியாதது தங்கட்குத் தெரியுமென்றும், மற்றவர்களால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்கமுடியுமென்றுங் கூறிடுபவனை, ஆராய்ச்சியுடையோர், அவன் ஓர் புரட்டன் என்று ஏசி ஒதுக்குவார்; ஆராயுந் திறனற்றாரோ, `அப்படியா! என்று ஆச்சரியத்தால் வாய் பிளக்க நின்று கேட்பர், கைகூப்புவர்! இந்த முறையிலே, ஆரியம், தமிழரிலே தன்னுணர்வு, அறிவு நுணக்கம் அற்றவர்களைப் பலிகொண்டது. வீராவேசங்கொண்ட வேங்கையானாலும், சதுப்பு-நிலத்திலே - படுகுழியிலே - வீழ்ந்துவிட்டால் சாகத்-தானே வேண்டும்! நீள்வையம் எதிர்த்தாலும், எமக்கு நிகர் இல்லை என்று கூறிப் போரிடும் மறத்தமிழரும், ஆரிய மதக்குழியிலே வீழ்ந்ததால் அறிவு, ஆற்றல், ஆண்மை, மானம் எனும் பண்புகளை இழக்கவேண்டி நேரிட்டது.
``இந்தியாவில் ஆரிய ஆட்சி என்றோர் நூல், ஹாவல் (ழயஎநடட) என்பவர் எழுதியுள்ளார். அதிலே மதச்சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலிலே, பிராமணர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும் ஆபாசமான, காட்டு மிராண்டித்தனமான மூட நம்பிக்கைகளைப் பரப்பவும் முடிந்தது. மந்திரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை! போரில் ஜெயமோ, அபஜெயமோ, மந்திர உச்சாடனத்தாலே சாதிக்க-முடியும்! சமஸ்தானங்களின் க்ஷேமத்துக்கு எதிரியின் வாயை அடக்குதற்கு, இருமலை நீக்குதற்கு, சடை வளர்தற்கு, எதற்கானாலுஞ் சரியே மந்திரத்தால் பலன் உண்டு! நித்திய கர்மானுஷ்டானங்களிலே, பிரமாத காரியமோ அற்பவிஷயமோ எதற்கும் அந்த மந்திரம் அவசியம் தேவை என்று ஆரியர் கூறிவைத்தனர்!! என்று ஆசிரியர் கூறுகிறார். இவர் ஈரோட்டு வாசியா? பெரியாரின் சீடரா? சுயமரியாதைப் பிரசாரகரா? ஏன் சுரண்டிப் பிழைக்க ``மந்திரம் என்று மயக்க மொழி-பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் என்பதை எழுதுகிறார்? `ஆரியமாயையிலே சிக்கி நம்மவர்மீது ``துவஜம் தொடுக்கும் தமிழர்கள், இந்த ஆராய்ச்சியாளரின் கண்டனத்தைப்பற்றி யோசிக்கக்கூடாதா, ``வேத கால முதற்கொண்டு ஆரியர்கள் அனுஷ்டித்து வந்த யாகம், பிராமணருக்கு, மற்றவரைக் கொடுமைப்படுத்தவும் ஏமாற்றவும் ஓர் கருவியாக உபயோகப்பட்டது என்றும் ஹாவல் எழுதுகிறார்.
மந்திரம், யாகம் என்பவைகள் பார்ப்பன புரட்டு என்று தன்னுணர்வு இயக்கத்தார் கூறினால் கோபங்கொள்ளும் ``தாசர்கள், இந்த ஆராய்ச்சிக்காரனின் உரை கேட்ட பிறகாவது தம் கருத்தை மாற்றிக்-கொள்ளக் கூடாதா? `ஆரிய ஆட்சி, ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை மனத்தினரை வாட்டிவதைத்த வரலாறேயாகும். இல்லை என்பதற்கு எங்கிருந்தாவது ஆதாரம் தேடிக்காட்ட, யாராவது முன்வருவார்களா என்று கேட்கிறேன்.``கருத்து, சுருண்டு அங்குமிங்கும் அலைந்து, உன் மனதிலே அலைமோதிடச் செய்யும் அழகுடன் விளங்கும் கூந்தல், உண்மையிலே நரைத்தது! மினுக்குத் தைலமும் கத்தரிக்கோலும், அவளுடைய கைத்திறனும், உன் காமக்கிறுக்கும் கலந்து உனக்கு மயக்கமூட்டுகிறது!`வதனமே சந்திரபிம்பமோ, மலர்ந்த சரோஜமோ என்று நீ சிந்துபாடுவாயே, சற்று சபலத்தை ஒதுக்கிவிட்டு அந்த முகத்தை உற்று நோக்கு! நல்ல இரத்தமில்லாததால் வெளுத்து, காலத்தின் கீறல்கள் நிறைந்த காமுகரின் கரத்தினால் கசங்கிக் கிடக்கும் மோசமும், அதை மாற்ற அவள் அணிந்துள்ள பூச்சு வேஷமும் புலனாகும்!``அந்த சிரிப்பிலே நீ சொக்குகிறாய்; அது சிலந்தியின் மொழி! வலைவீசும் சாகசம்! அதைக்கண்டு நீ ஏமாறுகிறாய்! உன் வாழ்வை வளைத்துவிட்ட அவளுக்கு, நீ அடி வருடுகிறாய்! உன் அறிவை அழிக்கும் அணைப்பிலே, நீ ஆனந்தம் காண்கிறாய்! உன் பண்பினைப் பாழாக்கிய பார்வையை, நீ பாகு என்று பகருகிறாய்! அந்த மேனியின் பளபளப்பு வெறும் மேல் பூச்சு! அந்தப் புன்னகை முகத்தாளின் மனம், ஓர் எரிமலை! அவள் ஓர் நடமாடும் நாசம்! உனக்கு வேண்டாமப்பா அவளிடம் பாசம்! உன்னைக் கெடுத்திடுமே அந்தக் காசம்! - என்று வெளிவேஷத்தால் வயோதிகத்தை மறைத்துக்கொண்டு, வாஞ்சனையுடன் பேசும் வித்தையால் தனது வஞ்சகத்தை வெளிக்குத் தெரியவொட்டாமல் செய்து, நகைமுகங்காட்டி நாசத்தை ஊட்டிடும் நாரியிடம் நேசங்கொண்டு, விவேகமிழந்து, காமப் பரவசனாகியுள்ள தன் தோழனுக்குக் கருத்துக்கெடாதவன் கனிவுடன் புத்தி கூறுகிறான்!
`அனங்கன் அம்பாலே அடிபட்டேன்! அவளிடமே சென்று அதற்கு மருந்து கண்டேன்! என்று கூறி, காமுகனாகிவிட்ட அவன், ``போடா, உலகமறியாத உன்மத்தா! நீ என்னடா கண்டாய், அந்த எழிலுடையாளின் இச்சொல்லின் சுவையையும், மதுரகீதத்தின் மாண்பையும், மஞ்சமேவிக் கொஞ்சிடும் பஞ்சபாண வித்தைத் திறத்தையும், அனுபவமில்லாத அபாக்கியசாலி நீ! நான் பெறும் இன்பத்தைத் துன்பமென்று கூறுகிறாய், நிலவை நெருப்பென நவில்கிறாய்; தென்றலைத் தேள்கடி என்று கூறுகிறாய்; கனியைக் கைப்பு என்றுரைக்கிறாய்; காதலைக் கானல் என்று சொல்லுகிறாய்; உல்லாசத்தை உற்பாதமென்று உரைக்கிறாய்; முல்லையை முள்ளென மொழிகிறாய்; மூடனே, போ! போ! நான் பெற்ற இன்பம் நீ பெறு-முன்னம், நான் கொண்ட அறிவு உனக்கெப்படிப் பிறக்கும்? என்று, கரையும் காகத்தைக் கடிந்துரைத்து விட்டுக் காலை மலர்ந்ததே என் களிப்பும் உலர்ந்ததே! என்று கவலைப்-படுகிறான்.
அவனுடைய வெறி அப்படி இருக்கிறது! குடி கெடுப்பவளை, அவன் கொடியிடையாள் என்று நம்புகிறான்! அவனைத் தடுக்க முயலும் நண்பனை நையாண்டி செய்கிறான்!ஆனால், சித்த வைத்தியர் செந்தூரம் கொடுத்து அலுத்து, பஸ்பத்தைக் கொடுத்துப் பயந்து, கஷாயம் காய்ச்சிக் கொடுத்தும் பயனில்லாததுகண்டு கவலைகொண்டு, `கடுகு துவரையாகி, துவரை அவரையாகி, அவரை சுரைபோலாகிவிட்டதே, அய்யோ! நான் என்ன செய்வேன். கட்டு மாத்திரையால் முடியாது கத்தியே இனித்துணை என்று கூறும்போது-தான், காமுகன் கலங்கி நடுங்கி, கை கூப்பிக் கதறி, `கத்தியா என்று கேட்டுக்கூவி `கனிவுடன் அன்று நீ சொன்னாயே நண்பா, கசடன் நான், கேட்டேனில்லையே! கண்டவர் ஏசும் நிலைபெற்றேனே! கள்ளியின் கூட்டுறவால் கெட்டேனே! என்று (புத்தி கூறிய) நண்பனைக் கட்டித் தழுவி அழுவான்.
அதுபோலத்தான் ஆரியம் தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப் போர்வை தரித்துக்கொண்டு வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத் தெரியவொட்டாது தடுத்து, வாசத்தை நம் இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது! அந்த நஞ்சினை உண்ணாதீர் என்று கூறும் சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள் ஏசுகின்றனர்! ஏளனம் பேசுகின்றனர்! ஆரியத்தால் அழிவு உண்டாகும், அந்தச் சமயத்திலே, `சு. ம. காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு! அன்று அவனை நையாண்டி செய்தோம். இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே! என்று, ஓர் நாள் கூறித்தான் தீரவேண்டும்.
தமிழ் மாணவர்கள் மனதில் பதிய வேண்டிய சரித ஆதாரங்கள், கீழே தரப்-பட்டுள்ளன. தமிழர் என்ற இன உணர்ச்சியுள்ள ஆசிரியர்கள், இந்த ஆதாரங்களையும், இவை போன்ற வேறு ஆதாரங்களையும், தமிழ் மாணவர்கட்குத் தெரியச் செய்யவேண்டும். இன்றைய கல்வி நிலையங்களிலே பெரும்பாலும் ஆரியரே சூத்திரதாரிகளாக இருப்பதால், உண்மை மறைகிறது. இப்போதுதான், தமிழ் மாணவரிடையே விழிப்பு ஏற்படுகிறது. விழிப்புப் பரவவும், எழுச்சி அதிகரிக்கவும், ஆதிநாட்களிலிருந்து இதுவரை ஆரியம் செய்த அட்டூழியத்தை வாலிபர்கள் உணரவும் செய்யவேண்டும்.
ஆரியத்துக்கு முன்பு இந்தியாவின் நிலை என்ன? ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை இவைகளைப் பண்டைய ஆராய்ச்சி மூலம் சிறிது காலவரையறையுடன் கீழே காட்டப்பட்டிருக்கிறது. இவை, சரித்திராசிரியரான தோழர் பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்களால் எழுதப்பட்டு, 1923-இல் பதிக்கப்பட்டுள்ள ``இந்திய சரித்திரம் முதற்பாகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்.
http://unmaionline.com/20071202/pa-19.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment