"உண்மை" மாதமிருமுறை இதழில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் தொடர்.
1-ம் பகுதி
படையெடுப்புகளிலேயே மிகவும் கொடுமையான, மோசமான படையெடுப்பு, பண்பாட்டுப் படையெடுப்புதான். பல நேரங்களில் நான் இதை விளக்கியது உண்டு. அரசியல் படையெடுப்பு என்பது கைகளில் போடப்பட்ட விலங்கு; பொருளாதாரப் படையெடுப்பு என்பது கால்களில் பூட்டப்பட்ட விலங்கு. ஆனால், பண்பாட்டுப் படையெடுப்பு என்பது மனித மூளையில் போடப்பட்ட விலங்கு.
அரசியல், பொருளாதாரப் படையெடுப்புகள் கண்களுக்குத் தெரியும்; பார்ப்பவருக்கும் தெரியும். ஆனால், மூளையில் போடப்பட்ட இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு கண்ணுக்கும், கருத்துக்குமே தெரியாது! உணவில் கலந்து கொடுக்கப்பட்ட - மெல்லக் கொல்லும் நஞ்சு (Slow Poising Drug) மருந்து, உடனடியாக ஆளைக் கொல்லாது; உடலின் முக்கிய உறுப்புகள் ஒவ்வொன்றையும் மெல்ல மெல்ல ஆனால், உறுதியாகச் செயல் இழக்கச் செய்யும். அதுபோலத்தான், இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு நமது திராவிடர் இனத்தின் மூளையை, சிந்தனையைப் பூட்டி, அதன் மொழி, கலை, நாகரிகம், வாழ்க்கை முறை எல்லாவற்றையும் செயல்படாது செய்ததோடு, நம் இன எதிரிகளின் மொழியை, கலைகளை, நாகரிகத்தினை நம்முடையது என்று எண்ணி அபின், கஞ்சா போதையில் உள்ளவன் எப்படி எளிதில் மீள முடியாமல் கிடக்கின்றானோ, அதுபோன்ற வீழ்ச்சி அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டு விடும்.
சுமார் 3000 ஆண்டுகாலமாக இந்நிலைதான் தமிழர் - திராவிடர் சமுதாயத்தின் கெட்ட வாய்ப்பான நிலை. பல்லாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனீயம் ஆதிக்கம் செலுத்தி வருவதன் ரகசியத்தை - தந்தை பெரியார் ஓர் அரிய சமுதாய விஞ்ஞானியாக ஆனபடியால், தமது பரிபூரண பகுத்தறிவு நுண்ணாடியால் அந்தக் கிருமிகளைக் கண்டறிந்து, நோய் நாடி - நோய் தீர்க்க முயன்றார்கள்!இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்ற சிறைக்குள் தள்ளப்பட்ட இந்த இனம், எவ்வழியாக எந்த முக்கியக் கதவு (Main gates) வழியே சிறைக்குள் சென்றதோ, அதே வழியின் மூலம்தான் வெளியே வந்தால்தான் அதற்கு விடுதலை என்று பெயர்; அந்தப் படிக்கு இல்லாமல், சுவர் ஏறிக் குதித்தோ, ஜன்னல் கம்பிகளை அறுத்தோ வெளிவந்தால் அது விடுதலையாகாது. அரசியல், பொருளாதாரத் துறையில் போராடி வெற்றி பெற்றோம் என்பது பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து விடுவதாக ஆகிவிட முடியாது. அதற்கென தனித்த பார்வை தனித்த வழிமுறைகள் இவைகளை நாம் பெற்றுப் போராடினால் ஒழிய வெற்றி பெற முடியாது!
1938 தேர்தலில் ஜஸ்டீஸ் கட்சி பெருத்த தோல்வியைச் சந்தித்தபோது, அக்கட்சியின் மூத்த பெரும் தலைவர்கள் எல்லாம், துக்கத்தினால் துவண்டபோது, தந்தை பெரியாரைத் தலைவராகப் பொறுப்பு ஏற்கும்படி வேண்டி இசையச் செய்தனர். அந்நிலையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை வீச்சு முற்றிலும் அவர்கள் கருத்துக்கு மாறாக இருந்தது. 'இந்தத் தோல்விக்காக நான் வருந்தவில்லை; மாறாக, மகிழ்ச்சி அடைகிறேன். காரணம், நீங்கள் அரசியல் பதவிகளைக் குறி வைத்து மட்டும்தான் கட்சி நடத்தி வந்தீர்களே தவிர, ஒட்டு மொத்தமான நமது பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் முழு உரிமையை எல்லாத் துறைகளிலும் காப்பதற்காக என்று செயல்படவேயில்லை. உத்தியோகங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்துவதாக குறைபட்டு, அதை எதிர்த்துக் குறைகூறிய நீங்கள், வீட்டிற்கு வந்து அதே பார்ப்பானின் காலில் விழுந்து, உங்கள் வீட்டுக், கல்யாணம், கருமாதி போன்ற சடங்கு சம்பிரதாயங்களால் பார்ப்பனர் தம் ஆதிக்கத்தினை காலங்காலமாகப் பாதுகாக்கும்போது, அவர்களுக்கு என்ன குறைச்சல் ஏற்படும்? எவை அதை ஒழித்துக் கட்டி ஒரு சமுதாய மாற்றம் ஏற்பட்டாலொழிய நம் மக்களுக்கு உண்மையான முன்னேற்றம் ஏற்படவே ஏற்படாது' என்றார்கள். ஆரிய மாயை என்ற அற்புதமான நூலில் அறிஞர் அண்ணா விளக்கியுள்ளார் மிகவும் விரிவாக அதை அடுத்த இதழில் ஆராய்வோம்.
நன்றி: உண்மை ஆன்லைன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment