சைவக் குரவர்களால் சிலிர்த்துப் பாடப்பெற்ற ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவது பிரச்னையாகி அரசின் அதிரடி முயற்சியால் இப்போது நிலைமை சகஜமாகியிருக்கிறது.
'போலீஸாரையும் தேவாரம் பாட வந்த ஓதுவார்களையும் நெய்யையும் எண்ணெயையும் வாரி ஊற்றி ஓடஓட விரட்டிய இந்தத் தீட்சிதர்கள் யார்?' என்று வேத மேதை அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம் கேட்டோம்.
''வழிபாட்டு முறைகளுக்காக உண்டாக்கப்பட்டதுதான் ஆகமம். அதாவது வைஷ்ணவத்தில் பாஞ்சராத்ர ஆகமம் வைகானஸ ஆகமம்னு ரெண்டு இருக்கு. சைவத்துக்கு சிவாகமம்னு பேர். இந்த ஆகமத்தை அதாவது வழிபாட்டு முறையை புறக்கணிச்சிட்டு 'வேதம் சொன்னபடிதான் வழிபாடு நடத்துவோம்'னு சொல்பவர்கள்தான் தீட்சிதர்கள்.
தீட்சிதர்கள் என்ற சொல்லுக்கு தீட்சை பெற்றவர்கள் என்று அர்த்தம். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பூஜை செய்யும் பட்டாச்சாரியார்களுக்கும் தீட்சிதர்கள் என்ற பட்டம் உண்டு. அவர்கள் ஆகம தீட்சை பெற்றவர்கள். ஆனால் இந்த தீட்சிதர்களோ வேத தீட்சை பெற்றவர்கள். அதாவது தன்னை வழிபடுவதற்காகவே கைலாசத்திலிருந்து சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள் இந்த தீட்சிதர்கள். அவர்களுக்கு தாங்கள்தான் 'ஒரிஜினல் பிராமணர்கள்' என்ற எண்ணம் உண்டு.
இந்த தீட்சிதர்களது ஆகமம் அல்லாத வைதீக வழிபாடு சிதம்பரத்தில் மட்டுமல்ல ஆவுடையார்கோயில் காஞ்சிபுரம் காமாட்சி கோயில் ஆகிய இடங்களிலும் நடக்கிறது. ஆனால் அவர்களெல்லாம் சிதம்பரம் தீட்சிதர்களைப் போல இவ்வளவு தீவிரமாக இல்லை. வேதத்துக்குப் பிறகான காலங்களில் தோன்றியதுதான் ஆகமம். ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாகங்கள் முதலானவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருவதுதான் தீட்சிதர்களின் வழிமுறை.
வேதம் சொன்ன யாகங்களில் முக்கியமானது பலிபொருட்கள். அதாவது மாடுகள் ஆடுகள் குதிரைகள் ஆகியவற்றை பலி கொடுக்க வேண்டும். அதனால் சிதம்பரத்திலுள்ள ஒவ்வொரு தீட்சிதரும் இன்றுவரை பசுக்களை பலி கொடுக்கும் சோம யாகம் முதலானவற்றைச் செய்துவர வேண்டும் என்பது ஐதீகம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே பசுக்கள் பலியிடப்படும் யாகங்கள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அப்படியெல்லாம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.
'வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும் வேதம் சொன்ன வடமொழியில்தான் இருக்க வேண்டும்?' என்று சொல்லித்தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள். இன்னும் ஒரு சங்கதி தெரியுமோ?
சைவ ஆகமத்தில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. ஆனால் வேத வழிபாட்டை பின்பற்றும் சிதம்பரத்தில் லிங்கத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. பெரும்பாலான பக்தர்கள் கோபப்படக் கூடாது என்பதற்காகத்தான் சிதம்பரத்தில் சிவபெருமான் 'ஆகாச லிங்கமாக' இருப்பதாக... அதாவது கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். மக்களும் நம்பிவிட்டனர்.
லிங்கத்தைவிட நடராஜர்தான் அங்கே முக்கியம். 'நடராஜ மகாத்மியம்' என்றொரு புஸ்தகத்தை எழுதியிருக்கார் ஒரு தீட்சிதர். அதில் 'சிவபெருமான் நடனப் போட்டியில காளி தேவியைத் தோற்கடிக்க வழி தெரியாமல் தன் இடக்காலை உயரே தூக்கி சங்கடப்படுத்தினார். காளியும் வெட்கப்பட்டு ஆட்டத்திறன் அதனால் பாதிக்கப்பட்டு நடராஜர் ஜெயித்தார் என்று கதையே உண்டு.
அதாவது சூத்திரர்களைத் தோற்கடிக்க வேண்டும். அவர்களின் பாஷையான தமிழை முற்றாக மறுதலிக்க வேண்டும் என்பதுதான் தீட்சிதர்களின் கொள்கை. இவர்களைப் போய் 'தில்லைவாழ் அந்தணர்கள்'னு சுத்தத் தமிழில் அடைமொழி போட்டு யார் கூப்பிட்டதோ...'' என்று பொருள் பொதியச் சிரித்தார் தாத்தாச்சாரியார்.
நன்றி: ஆனந்த விகடன்
Saturday, March 8, 2008
தீட்சிதர்கள் யார்? நடராஜர் இடக்காலை தூக்கி ஆடுவதன் மர்மம் என்ன?
Labels:
நால்வர்ணம்,
பார்ப்பன வேதம்,
பார்ப்பனீயம்,
பார்ப்பான்,
புராணக்கதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment