Thursday, March 20, 2008

நடிகர் பார்த்திபனை ஏமாற்றிய சாமியார்!

``சார், சென்னைப் புறநகர்ல தெரிஞ்ச ஒரு சாமியார் இருக்கார். நீங்க ஒரு தடவை போய்ப் பார்த்தீங்கன்னா எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடும். நிறைய மினிஸ்ட்டருங்க அவரைப் பார்த்துட்டுப் போறாங்க. ரொம்ப பவர்ஃபுல்.’’``

ஏற்கெனவே பவர்ல இருக் கிற மினிஸ்ட்டருங்க எதுக்கு அவரைப் போய் பார்க்கணும்?’’நான் கிண்டலடிக்க,``இப்படியெல்லாம் கேட்டீங்கன்னா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. ஒரே ஒரு தடவை நீங்களும், அண்ணியும் வந்து பாருங்களேன்.’’

சம்மதிப்பதற்கான சமாதானங்கள் தொலைக்காட்சி சீரியலாக நீள, அந்தப் புறநகர் சாமியார் இடத்தில் `ஸாரி’ மடத்தில் நாங்கள் பணிவாய்க் காத்திருந்தோம்.

வரும் முன் பார்ப்போம் என அந்த அறையை என் கண்கள் வட்டமிட்டதில், ஒரு சாமிப் படமும் அங்கு இல்லை. எல்லாம் அந்த சாமியார் படங்களாகவே இருந்ததில் என் புருவங்கள் இரண்டும் கேள்விக்குறியாக வளைந்தன.

ஒரு திரைப்படப் புகைப் படக் கலைஞரின் அதி அழகியல் நுட்பத்துடன் ஒவ்வொரு ஃப்ரேமும் இருந்தது.அவரது கண்கள் மட்டும், ஒரு `8’ போல் விரல்கள் பிணைந்திருக்கும் இரு கைகள் மட்டும், காவி வேட்டிக்குள் இருந்து எட்டிப் பார்க்கும், இரண்டு கால்கள் மட்டும், புறமுதுகிட்டு அவர் அமர்ந்திருப்பது மட்டும், கடைசியாக அவரது முழு உருவம்.எல்லாப் படங்களிலும் மலை மலையாக உதிரிப் பூக்கள் ஒட்டப்பட்டிருந்தன. தன்னைத்தானே சாமியாக வணங்கும் ஒரு சாமியாரைப் பார்ப்பது வியப்பாக மட்டும் இல்லாமல் ஏதோ ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

ஒரு தெலுங்குப் பட வில்லனின் வாசனை அந்த அறைக்குள் முதலில் நுழைந்தது. பிறகு அவர் வந்தார். ஆஜானுபாகுவாக இருந்த அவர், மைசூர் பாகுவாக இனிமையாகப் பேசினார். கேசரிப் பவுடர் போட்டுக் கிண்டியதைப் போல கண்கள் இளம் சிவப்பில் மிதந்தன.

அதை மூடி வைத்து ஒரு வேக்காட்டுக்குப் பின் திறந்த படி, ``சொல்லுங்க’’ என்றார்.`சொல்’வதற்குள் எல்லாம் எனக்குத் தெரியும். உங்களுக்கு யாரோ செய்வினை பண்ணியிருக்காங்க.’’

அதிர்ச்சி எங்களை ஆட்கொண்டது.``உங்க வீட்லயிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துட்டு வாங்க. யார் செஞ்சதுன்னு சரியா சொல்லித்தரேன்.’’

அவர் பேச்சில் ஏதோ பிடிப்பு ஏற்பட, பிடி மண்ணுடன் மீண்டும் ஆஜரானோம். அந்த மண்ணைத் தன் உள்ளங்கையில் வைத்து, கண்ணை மூடிப் பார்த்தவர், சில நொடிகளுக்குள் `ஷாக்’ அடித்தவர் போல கை உதற, மண் சிதறியது. எங்கள் இருவரையும் மாறி, மாறிப் பார்த்தவர், ஒரு மாதிரியாகவும் சிரித்தார்.

``நெறைய வெச்சிருக்காங்க. தொழில் நாசமாக கெட்ட காரியம் பண்ணியிருக்காங்க.’’

நாங்கள் இருவரும் புதிருக்குள் விழுந்தோம்.``யார் செஞ்சிருப்பாங்க...? ஏன் செஞ்சிருப்பாங்க...?’’

``எடுக்கலாம். ஆனா, பொதுவா நான் யார் வீட்டுக்கும் போகாது’’ என்று கூறியபடி கோழியாகி அந்த மண்ணையே கிளறிக் கொண் டிருந்தார்.நாங்கள் கிட்டத்தட்ட கெஞ்சிய பிறகு, ஒப்புக்கொண்டார், எங்கள் வீட்டின் விஜயத்துக்கு.அப்படி அவர் வருவதானால், நாங்கள் என்னவெல்லாம் வாங்கி வைக்கவேண்டும் என்று அவரே ஒரு `லிஸ்ட்’ எழுதிக் கொடுத்தார்.அந்த அனுமார் வாலைச் சுருட்டி, பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, வேகமாக வெளியேறினோம். ஆனால், எங்கள் மனக்கடல் உள்வாங்கியது வருத்தத்தில்.

அவர் எங்கள் வீட்டுக்கு வரும் வரை எங்கள் கண்களும் கேசரி பவுடரைப் போட்டுக் கிண்டியதைப்போல சிவந்தே இருந்தது உறக்கமின்மையால்.

வந்தார். ``எல்லாம் ரெடியா?’’ என்றார். வழக்கமான பூஜை பொருள்களுடன் மூன்று நிறங்களில் மூன்று சாத உருண்டைகளை உருட்டி வைத்திருந்ததைக் காட்டினோம். அந்தக் குறிப்பிட்ட பூஜைக்காக குறிப்பிட்ட கறை போட்ட வேட்டியையும் வாங்கி வைத்திருந்தோம்.

காட்டிய வேட்டியைக் கட்டிக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தார். நுழையும் முன், ``அந்த கார்டன்ல மூணு அடிக்கு ஒரு குழியத் தோண்டி வைங்க. வேலைக்காரங்க வேணாம். நீங்களே தோண்டுங்க’’ என்று சொல்லிவிட்டு அந்த மூன்று சாத உருண்டைகள் உள்ள தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

முப்பது நிமிடம் கழித்து வெளியே வந்தார்.எனக்கு நானே குழியைப் பறித்துவிட்டு, (அதாவது தனியனாக) நின்று கொண்டிருந்த என்னிடம் அந்தச் சாத உருண்டைத் தட்டை நீட்டி குழியில் போடச் சொன்னார். அதில் தீர்த்தம் ஊற்றி மண்ணை மூடி, சூடம் காட்டி, ``சூ.... மந்திரக்காளி’’ சொல்லி சற்று கழித்து என்னிடம் அந்தக் குழிக்குள் கையை விட்டுத் தேடிப் பார்க்கச் சொன்னார்.

சற்று நேரம் தேடிய பின், அந்த புதைபொருள் ஆராய்ச்சியில் புதைந்திருக்கும் பொருள் தெரியாமல், அண்ணாந்து அவரைப்பார்த்தேன்.`இன்னும்’ என அவர் இமை சுருங்கி விரிந்தது. இன்னும், இன்னும் தேட விரல் இடுக்கில் ஏதோ தகடுபோல் தட்டுப்பட்டது. வெளியில் எடுத்து அவரிடம் நீட்டினேன். அவரும் பழிக்குப் பழியாகத் தண்ணீர் இருந்த ஒரு பாத்திரத்தை என்னிடம் நீட்டினார்.அதில் போட்டு விட்டு, இன்னும் தேடி, இன்னும் இன்னும் போட்டேன். பாத்திரம் நிறைய செம்புத் தகடுகள் புழுவாய் நெளிந்தன.

ஒட்டியிருந்த மண்ணை எல்லாம் துடைத்து விட்டு என்னை அதைப் படித்துப் பார்க்கச் சொன்னார்.`உன் சினிமா தொழில் சின்னாபின்னமாக’, `நீ நாசமாகப் போக’, `உன் புள்ளைங்க உருப்படாமல் போக’, நீ ஜன்னி வந்து சாக’, உன் பொண்டாட்டி புள்ளைங்க அழிஞ்சு போக...’

இப்போது இதை எழுதும் போதே என் கைகள் நடுங்குகிறது என்றால், அதை வாசித்த போது என் மனம் என்னவாய் வெடித்திருக்கும்!

துடித்தபடி நானும் என் மனைவியும் கேட்டோம். ``யாருங்க...? யாருங்க..? யாருங்க எங்களுக்கு இப்படி செஞ்சிருப்பாங்க?’’

அமைதியாக எழுந்தவர், எங்கள் தலைமீது அவரின் கையை வைத்து (ஏற்கெனவே நாங்கள் தலையில் கை வைத்த படிதான் அமர்ந்திருந்தோம்.``எல்லா செய்வினையையும் நான்தான் எடுத்திட்டேன்ல.... அப்புறம் ஏன் கவலைப்படு றீங்க? இனிமே நீங்க நல்லா இருப்பீங்க!’’ எனக் கூறிவிட்டு ஒரு வேப்பிலை மரமாய் வெளியேறினார்.

என் மனைவியின் அழுகையின் பின்னணியில் நான் மீண்டும் மீண்டும் அந்தத் தகடுகளைப் படித்தபடி, படிக்காமல் வெறித்தபடி இருந்தேன்.யாராக இருக்கும்? இவ்வளவு வன்முறையான வார்த்தைகள் வர எது ஏதுவாக இருந்திருக்கும் என்று என் மண்டைக்குள் ஜல்லடை போட்டேன்.

முதலில் இந்தக் கையெழுத்து யாருடையது?எங்கோ பார்த்த மாதிரி ஞாபகம்... அதுவும் சமீபமாக...சலித்த பிறகு ஜல்லடையில், ஒரே மாதிரியான சுழித்தல் உள்ள நான்கைந்து எழுத்துகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

திடீரெனத் தலையில் தேங்காய் அடித்து உடைத்தது போல் ஒரு அனுமார் வால் பேப்பர்.சாமியார் எழுதிக் கொடுத்த, அந்த `லிஸ்ட்’ பேப்பரை எடுத்துப் பார்த்தேன். என் கண்கள் மின்னின. அந்தத் தகடுகளையும், பேப்பரையும் ஒப்பிட்டேன். என் மனைவியைக் கூப்பிட்டேன்.

``ஆமா! ரெண்டு கையெழுத்தும் ஒரே மாதிரிதான் இருக்கு!’’

வலமிருந்து இடமாக பூமிப் பந்து சுழல்வதை எங்கள் தலைச் சுற்றலால் கவனிக்க முடியவில்லை.பணம் சம்பாதிக்கும் ஆசையில் அதிபுத்திசாலித்தனம், செம்புத் தகடுகளாய் மாறி, சாத உருண்டைக்குள் நுழைந்து பூமிக்குள் புதைந்து மீண்டும் எங்கள் கைகளில்.

இதை நான் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சாமியாரின் மந்திர சக்தியால் இனி எங்கள் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்ற அளவில் நாங்கள் சந்தோஷமாக இருந்திருப்போம்.

அதிபுத்திசாலித்தனம், ஆபத்துகளை விளைவிக்க ஆயத்தமாக, ஆயுதமாக ஆகிவிடுமோ...?

சாமியார் சென்ற திசையைப் பார்த்தோம். தி.நகர் சென்று விட்ட அவருடைய கார் கிளப்பிய புழுதியில் புழுக்கமும், வேதனையும் பரவி, விரவி வியாபித்திருந்தது.

நன்றி: `கல்கி’, 10.6.2007
http://viduthalai.com/20070605/news11.htm

No comments: