Saturday, May 31, 2008

மகர ஜோதி மனித செயலா?

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மகர விளக்கு பூஜையின்போது, பொன்னம்பல மேடு என்று அழைக்கப்படும் மலைமுகட்டில் தெரியும் ஜோதி இயற்கையானது அல்ல என்றும், அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான் என்றும் சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரு கூறியதை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

சபரிமலைக்கு ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜையின்போது, தென் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். 40 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு வரும் அவர்கள், ஜனவரி 14-ம் தேதி மாலை ஐயப்பனுக்கு கற்பூர ஆரத்தியுடன் பூஜை நடைபெறும்போது, பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதி, ஐயப்பனே அங்கு தோன்றி காட்சியளிப்பதாக நம்புகிறார்கள்.

இந்த நிலையில், சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரு, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரது சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மகர விளக்கு வேறு, மகர ஜோதி வேறு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி அன்று கிழக்கு திசையில் தோன்றும் நட்சத்திரத்தைக் குறிக்கும் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், மகர விளக்கு என்பது புராண காலத்தில் ஐயப்பனின் மூலஸ்தானமாக இருந்த பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவதாகும்.

மகர விளக்கு ஏற்றும் இந்த வழக்கம், பரசுராம முனிவரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை நினைவூட்டும் விதமாகத்தான் இப்போது அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. காடுகளில் வசித்த பழங்குடி மக்களால் இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

மகர விளக்கும் மகர ஜோதியும் ஒன்று என நினைக்கும் சிலரது தவறான கருத்துக் காரணமாக இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது இது தேவையில்லாதது என்று அவர் கூறியிருந்தார்.

இதுபற்றி சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், மகர விளக்கு தீபம் எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

நன்றி. பிபிசி

2 comments:

VSK said...

என்ன சொல்ல வருகிறீர்கள்?

ஐயப்ப பக்தர்களுக்கு மகரவிளக்கிற்கும், மகர ஜோதிக்கும் வித்தியாசம் தெரியும்.

உண்மை உடையான் said...

//ஐயப்ப பக்தர்களுக்கு மகரவிளக்கிற்கும், மகர ஜோதிக்கும் வித்தியாசம் தெரியும்.//

விஎஸ்கே, எல்லோருக்கும் இந்த வித்தியாசம் தெரியும் என்றால், சபரிமலை தந்திரி சொன்னது சர்ச்சையாகவே ஆகியிருக்காது. அது பற்றிய விசாரணை நடத்த வேண்டிய தேவையும் கேரள முதல்வருக்கு நேர்ந்திருக்காது. யோசியுங்கள்!