தலித் மக்களின் பிரச்சினைகளுக்காக கடந்த 12 வருடங்களாக ஊடக தளத்தில் குரல் கொடுத்து வருபவர் ‘தலித் முரசு’ பத்திரிக்கை ஆசிரியர் புனிதபாண்டியன். மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ‘தலித் முரசு’ தன் பாதை மாறாமல் தொடர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர். ‘கீற்று’ இணையதளத்திற்காக அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்..
மாணவர்களிடையே ஈழப் பிரச்சினையின் தாக்கம்:
"...பொதுவாக சீனா போன்ற நாடுகளில் மாணவர்கள் அநியாயத்தை எதிர்த்துப் போராடியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நான் மாணவராக இருந்ததில் இருந்து, இதுவரை அப்படி எந்த மாணவர் குழுக்களும் சமூக மாற்றத்திற்காக இங்கே போராடி வெகுண்டெழுந்ததாக நான் பார்த்ததில்லை. வகுப்பை மட்டம் போடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே மாணவர்கள் இங்கே போராட்டங்களைப் பார்த்தார்கள். இதே நிலைமைதான் அப்பொழுதும் ஈழப்போராட்டத்திற்கும் இருந்தது. என் கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியர் மட்டும் தான் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார். திராவிட கழகங்கள், சில அமைப்புகள் பிரச்சினைகளை முன்வைப்பார்கள். அதிலுள்ள மாணவர்கள் எங்கள் கல்லூரிக்கு வந்து ஆதரவு கேட்பார்கள். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்கமாட்டார்கள்...."
தலித் அரசியல்:
"...தமிழக சட்டப்பேரவையில் தற்போது 42 தலித் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதன்பிறகும், ‘தலித்துகள் அரசியல் சக்தியாக மாறும்போது தான் அவர்களது பிரச்சனை தீர்க்கப்படும்’ என்று திருமாவளவன் கூறுகிறார். தலித்துகள் முக்கியமான அமைச்சர் பொறுப்புகளை வகித்தாலும் திருமாவளவன் இதையே தான் கூறுவார். அப்படியானால் அவர் முதல்வராக ஆக வேண்டும். அவர் முதல்வராக ஆக முடியுமா? அப்படியே ஆனாலும் தலித் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று யோசிக்க வேண்டும். இதற்கெல்லாம் பதில் இல்லாதபோது, தலித் அரசியல் என்பதில் போய் ஏன் விழவேண்டும்? ..."
மதமாற்றமும் தலித் முன்னேற்றமும்:
"...தலித்துகள் முன்னேறுவதற்கு அவர்களுக்கு நிலம் அவசியம் என்பதால் தான் நிலப்பங்கீட்டை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். கயர்லாஞ்சியில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட குடும்பத்திற்கு நிலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நில உடைமையாளர்களாக இருந்திருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் நிலப்பங்கீடு தவறு என்று சொல்லிவிட முடியாது. தலித் கிறிஸ்தவன் தலித் இந்துவை விட மிகமிகக் குறைந்த அளவிலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறான். வன்கொடுமையில் இருந்து தப்பிப்பது முதல் வழி. அதன்பிறகு இழிவை நீக்குவது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம்..."
இந்து மதத்தில் பெண்கள்!
"...ஒன்றை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை என இந்து மதம் போல வேறு எந்த மதமும் பெண்களை அடக்கி ஒடுக்கியதில்லை. இந்து மதத்தை எந்த மதத்தோடும் ஒப்பிடவே முடியாது. இந்து மதம் ஒரு மதமே அல்ல என்று கூறியிருக்கிறார் அம்பேத்கர். வேறு எந்த மதத்திலும் தேவையான சீர்திருத்தங்களை செய்து கொள்ள முடியும். இந்து மதத்தில் அது முடியாது. மற்ற மதங்களில் ஒரு ஜனநாயகத்தன்மை இருக்கிறது. இந்து மதத்தில் அது கிடையாது..."
அம்பேத்கர் தலித் தலைவரா?
"...ஒரு பார்ப்பனர் டாக்டராக இருந்தால் இந்த சமூகம் அவரை ஒரு மிகப்பெரிய டாக்டர் என்று குறிப்பிடுகிறது. ஒரு கவிஞர் பார்ப்பனராக இருந்தால் அவரை தேசியக் கவி என்று கொண்டாடுகிறது. பாரதிதாசன் பார்ப்பனர் அல்லாத காரணத்தினால் அவர் ஒரு தேசியக் கவி கிடையாது. பாரதியார் ஒரு மாநிலத்தில் பிறந்து ஒரே ஒரு மொழியில் மட்டுமே எழுதினாலும் அவர் தேசியக் கவியாக கொண்டாடப்படுகிறார். இதனால் தான் மகாத்மா காந்தி தேசப்பிதாவாக ஆகி, அம்பேத்கர் தலித் தலைவராக சுருங்கி விட்டார். இப்படி தலித் விஷயங்கள் தலித்துகளாலேயே சுருக்கப்பட்டு விட்டது..."
போராட்ட எல்லைகள்!
"...நாம் நடக்கும் சாலையில் ஏன் ஒருவர் மட்டும் செப்டிங் டேங்க் கழுவ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். மலத்தை வாயில் திணிப்பது தவறில்லை என்று நீதிபதி தீர்ப்பு கூறுகிறார். ஏன் சமூகம் இப்படி இருக்கிறது? என்பது மாதிரியான கேள்விகள் தலித்துகளுக்கு மட்டுமோ, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமோ எழ வேண்டிய அவசியமில்லை. சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட அனைவருக்கும் எழ வேண்டும். இந்த சீர்திருத்தத்திலும் இட ஒதுக்கீடு கேட்டுக்கொண்டு, நீ தலித்துக்காக போராடிக்கொள், நான் பிற்படுத்தப்பட்டோருக்காக போராடிக் கொள்கிறேன், என் போராட்ட எல்லை இதுவரை தான், உன் போராட்ட எல்லை அதுவரை என்று பேசுவது அயோக்கியத்தனம்."
நேர்காணலை முழுமையாகப் படிக்க இங்கே அழுத்தவும்.
நன்றி: கீற்று.காம்
Sunday, May 11, 2008
இந்து மதத்தை ஒழிப்பதுதான் ஒரே வழி: புனிதபாண்டியன்
Labels:
இந்துத்துவம்,
கீற்று,
தலித்,
பார்ப்பனீயம்,
பார்ப்பான்,
பெண்ணுரிமை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
one more example of naming attractively to get people..
are not you ashamed, just to blindly print any rubbish?
the following comment is very funny:
"வேறு எந்த மதத்திலும் தேவையான சீர்திருத்தங்களை செய்து கொள்ள முடியும். இந்து மதத்தில் அது முடியாது. மற்ற மதங்களில் ஒரு ஜனநாயகத்தன்மை இருக்கிறது. இந்து மதத்தில் அது கிடையாது..."
Params
தாம் இந்து என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படும் பார்ப்பனர்களே கிருஸ்துவ முக்காடுகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும்போது, உண்மையை உரக்க சொல்லும் நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்?
Post a Comment