பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன் அவர்கள் 8-2-08 தேதிய தினமணி இதழில் இந்தியப் பண்பாடு பற்றி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் தலைப்பே சாரே ஜஹான்ஸே அச்சா . . . என்பதாகும். உலகிலுள்ள அத்தனை நாடுகளிலும் சிறந்தது எங்கள் இந்துஸ்தான்(!) என்பது அந்தப் பாடலின் முதல் வரி.
உலகில் சிறந்த நாட்டை ஏன் இஸ்லாமியர்கள் படையெடுத்து அடிமைப்படுத்தினார்கள்? எப்படி இஸ்லாமியர்களால் இந்த நாட்டை 700 ஆண்டுகள் ஆள முடிந்தது? இந்தியாவை வெற்றி கொண்ட மொகலாயர்களால் துறவியர்கள் துன்புறுத்தப் பட்டார்கள். பெண்கள் மானபங்கப்படுத்தப் பட்டனர். ஆலயங் கள் தகர்க்கப்பட்டன என்று எழுதுகிறார். இக்கொடுமைகளை ஏன் இந்துக் கடவுள்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சோமநாதபுரம் கோயிலைப் பதினெட்டு முறை கஜினி முகமது படையெடுத்து அதன் விக்கிரகங்கள், செல்வங்களைக் கொள் ளையடித்துச் சென்றானே. ஏன் கோயிலில் வீற்றிருக்கும் ஆண்டவனால் கஜனியை அழிக்க முடியவில்லை?
இந்தியாவின் மீது படையெடுத்த அலெக்சாந்தரைப் பற்றி பெங்களூரில் ஒரு நாடகத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் பார்த்தாராம். இந்திய நாட்டுப் பண்பாட்டுச் சின்னங்களான ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, கண்ணனை நினைவூட்டும் புல்லாங்குழல் ஆகியவற்றை அலெக்சாந்தருக்குக் கொடுத்து அவற்றை விளக்கினார்களாம்!
ராமாயணமும், மகாபாரதமும் உண்மையாக நடந்த நிகழ்ச்சிகள் அல்ல; அவை பஞ்ச சந்திரம், அரேபியன் இரவுகள் போன்ற கற்பனைக் கதைகள் என்று பண்டித நேரு தாம் எழுதிய நான் கண்ட இந்தியா என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தென்னிந்தியாவில் ஆரியர்கள் பரவியதாகக் கூறும் கற்பனைக் கதைகள் என்று நேரு கூறுகிறார்.
தசரதன் அறுபதாயிரம் மனைவியர்களைக் கொண்டிருந்தான் என்று ராமாயணம் கூறுகிறது. அது தமிழர் பண்பாடா?
சம்பூகன் என்ற சூத்திரன் தன் குலத் தொழிலுக்கு மாறாகத் தவம் செய்ததால், என் மகன் இறந்து விட்டான் என்று ஒரு பார்ப்பான் ராமனிடம் முறை யிட்டானாம். ராமன் உடனே சம்பூகன் தலையை வெட்டி விட் டானாம். பார்ப்பனச் சிறுவன் உயிர் பிழைத்துக் கொண்டானாம்! இதுதான் கணேசன் புகழ்ந்து கூறும் பாரதப் பண்பாடா?
அய்ந்து சகோதரர்களுக்கு மனைவியாக இருந்த திரவுபதி எப்படி பத்தினியாக முடியும்? என்று தந்தை பெரியார் கேட்டாரே அதற்குப் பாரதீய ஜனதா கட்சி என்ன பதில் அளிக்கமுடியும்?
சிறியவனாக இருந்த போது வெண்ணெய் திருடி - பெரியவன் ஆனபோது பெண்கள் குளிக்கும்போது அவர்கள் சேலைகளைத் திருடியவனா நமது கடவுள் என்று அறிஞர் அண்ணா கேள்வி கேட்டாரே? அதற்கு இந்து மதவாதிகளின் பதில் என்ன?
பகவத் கீதையில் கண்ணன், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நால்வகை வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று கூறுகிறான். இந்த நால்வகை வர்ணங்கள் தமிழர் பண்பாட்டிற்கு முற்றிலும் புறம்பானதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவப் பெருந்தகை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று மனித சமத்துவத்தைப் பாடினார்.
இந்தியாவை வெற்றி கொள்ள என்ன தந்திரம் கையாள வேண்டும் என்று மெக்காலே 1835 பிப்ரவலி 2 ஆம் நாள் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் திட்டம் ஒன்று வைத்தாராம். இந்தியா முழுதும் மெக்காலே பயணம் செய்தாராம். ஒரு பிச்சைக்காரனையோ, ஒரு திருடனையோ இந்தியாவில் அவரால் பார்க்க முடிய வில்லையாம்!
மெக்காலே இந்தியாவில் பெருநகரங்களின் மூலை முடுக்களெல்லாம் சுற்றிப் பார்த்தவரா? இன்று அமெரிக்கா போன்ற செல்வம் கொழிக்கும் நாடுகளிலே கூட திருடர்கள் இருக்கிறார்கள் என்றால் அக்கால இந்தியாவில் கேட்க வேண்டுமா? அக்காலத்தில் கள்வர்கள் இருந்த காரணத்தால்தான் திருவள்ளுவர் தமது திருக்குறளில் கள்ளாமை என்ற அதிகாரத்தையே வைத்து மக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்
என்று எச்சரித்திருக்கிறார்.
இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் நாட்டில் இருபது கோடி மக்கள் ஒரு வேளைக்குத் தான் உணவு பெற முடிகிறது என்று சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கூறுகிறார். மெக்காலே பயணம் செய்த காலத்தில் பசிக் கொடுமையும், பிச்சை எடுத்தலும் இல்லாமலா இருந்திருக்கும்?
இந்தியாவின் தொன்மையான கல்வி முறை, கலாசாரத்தை அழிக்காமல் நாம் இந்தியாவை முழுவதும் வெற்றி கொள்ள முடியாது என்று மெக்காலே அறிக்கை வைத்தாராம். இந்தியாவின் கல்வி முறை என்பது பார்ப்பனர்களின் ஏகபோகமாக இருந்தது அல்லவா? சூத்திர மக்கள் கல்வி கற்கக்கூடாது என்ற மனுதர்ம முறை அல்லவா இங்கு ஆதிக்கம் செலுத்தி வந்தது!
டி.நோபிலி என்ற வெளிநாட்டுப் பாதிரியார் 1610 ஆம் ஆண்டு மதுரைக்கு வருகை புரிந்திருக்கிறார். மதுரையில் ஒரு கல்வி நிலையத்தில், கல்வி கற்று வந்த பத்தாயிரம் மாணவர்களும் பார்ப்பனராகவே இருந்ததாக நோபிலி தன் நாட்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்! இந்த மனுதர்ம முறையை விட ஆங்கிலேயரின் கல்வி முறை எவ்வளவோ சமத்துவத் தன்மை கொண்டதாகும்.
தமிழர் தலைவர் மானமிகு வீரமணியார் 12-1-2008 அன்று லயோலா கல்லூரியில் ஆற்றிய சொற்பொழிவில் கிறித்தவர்கள் இந்தியாவிற்கு வந்து கல்வியைப் பரப்புவதில் சிறப்பான தொண்டு ஆற்றி இருக்கின்றனர் என்று புகழ்ந்திருக்கிறார். (விடுதலை 4-2-08).
1901 இல் தமிழர்களில் படித்தோர் தொகை ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு என்று அரசு புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியாவின் தொன்மையான கல்வி முறையை மெக்காலே கல்வி முறை அழித்துவிட்டது என்று கணேசன் போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூறுவதைப் பகுத்தறிவு வாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இமயம் முதல் குமரி வரை இதை ஒரே நாடாக, ஒரே தேசமாக இந்தப் பண்பாடுதான் ஆக்கியிருக்கிறது என்று மிகப் பெரிய பொய்யை கணேசன் கூறியிருக்கிறார். பல்வேறு சிறு நாடுகளாக இருந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள் தங்கள் படைவலிமையால் ஒரே நாடாக ஆக்கினார்கள்.
சென்ற ஜனவரி மாதம் சென்னையில் கூடிய பார்ப்பனர் மாநாட்டில் பார்ப்பனர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது; அது நமது கலாசாரத்தைக் கெடுத்துவிடும் என்று பேசியிருக்கிறர்கள். பார்ப்பனர் கலாச்சாரம் வேறு; தமிழர்களின் நாகரிகம், பண்பாடு வேறு. தமிழர் களின் நாகரிகத்தை நாம் எதிர்காலத்திலும் போற்றிக் காப்பாற்ற வேண்டும்.
நன்றி - விடுதலை
Monday, May 12, 2008
திராவிட நாகரிகம் வேறு! ஆரியர் வாழ்க்கை முறை வேறு!
Labels:
நால்வர்ணம்,
பார்ப்பனன்,
பார்ப்பனீயம்,
பார்ப்பான்,
மனுசாஸ்திரம்,
வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment